வெள்ளி, 10 ஜூன், 2011

கடந்து ஆடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு; நீர் பாடினிர் செலினே!

.......................................


அளிதோ தானே, பாரியது பறம்பே!நளி கொள் முரசின் மூவரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே
வான் கண் அற்று, அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே; ஆங்கு
மரந்தோறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளில் கொள்ளலிர் வாளில் தாரலன்
யானறி குவென் அது கொள்ளும் ஆறே;
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே! 
....................................................


குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவன்வரை அன்னே!

............................................................


ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரைசென்று நின்றோர்க்கும் தோன்றும்; மன்றகளிறு மென்று இட்ட கவளம் போலநறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்வார் அசும்பு ஒழுகு முன்றில்தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே!
............................
பறம்பு குறித்த கபிலரின் பாடல்கள்



பறம்பு மலை சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை தற்போதுஇம்மலை கபிலரால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை, திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் என்னும் கபிலர் பாடல் போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக அமைந்துள்ளது. 


அமைவிடம் 

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 12 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். 

பறம்பு மலை வளம் 

பறம்புமலை மிகுந்த வளம் உடையதாக விளங்கியது. கபிலர் 106 வகைப் பூக்களைப் புகழ்ந்திருக்கிறார். உழவர் உழாமலேயே விளையும் மூங்கிலரிசி, வள்ளிக்கிழங்கு, மலைத்தேன், தேன்பலா முதலியன பறம்புமலையில் மிகுதியாகக் கிடைப்பன. பறம்புமலையின் சுனைநீர் குறித்துப் பல புலவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளனா். 

திணி நெடுங்குன்றம் தேன் சொரியும் மே என்பது கபிலரின் புறப்பாட்டு வரி. 

பாரி தீம்பெரும் பைஞ்சுனை என்பது நக்கீரனாரின் பறம்புமலைச் சுனையைக் குறித்த பாடல். 

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே 

தேம்பூங் கட்டி என்றனீர் இனியே 

பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் 

தைஇத் திங்கள் தண்ணிய தரினும் 

வெய்ய உவர்க்கும் என்றனிர் 

ஈய ஆற்றல் அன்பின் பாலே 

என்பது மிளைக்கந்தனார் என்னும் சங்கப் புலவர் பாடிய பாடலாகும். 

பறம்பு நாடு 

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். பறம்பு நாடு முந்நூறு ஊர்களை உடையது. அதனுடைய எல்லைகளாக, 

தென்னெல்லை - திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை - பறம்புக்குடி
கிழக்கெல்லை - பறம்புக்குடி- காளையார் கோயில் - முத்து நாடு - அனுமந்தக் குடி- பறம்பு வயல்
வடவெல்லை - பறம்பு வயல் - கானாடுகாத்தான், சோனாபட்டு - திருக்கோளக்குடி - பூலாங்குறிச்சி - இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் - பறம்பூர்

மேற்கெல்லை - பறம்பூர் - மருங்காபுரி - துவரங்குறிச்சி - நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி - அழகர் மலைக் கிழக்குப் பகுதி - பறம்புக் கண்மாய் - திருமோகூர்

என நிர்ணயிக்கப்பட்டன. 

இப்பறம்பு நாடு பாண்டிய நாட்டோடு இணைந்தது என்பதை, 

புரிசைப் புறத்தினில் சேரனும் சோழனும், போர்புரிய 
இரியச் சயங்கொண்டபோழ்தினில் யாமினி ஈங்கிவனைப் பரிசிற்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டிய மண்டலமே 

பாண்டி மண்டலச் சதகச் செய்யுள் உணர்த்துகிறது. 

பாடிய புலவர்கள் 

சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

கல்வெட்டுச் சான்றுகள் 

இப்பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று வழங்கப் பெறுகிறது. இங்குள்ள விசுவநாதர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில்,

  ...... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில் பாரிசுரமும் இக்களங்களில் 

என்று குறிக்கப் பெற்றுள்ளது. 

அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில்,

 ..... இந்நாட்டு அறுநூற்றுவனேரிப் பற்றில் பாரிசுரமும் இவ்ஊர்களில் .... 

என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன. 

தற்காலச் செய்திகள் 

பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன. 

(சான்றாதாரம் கவிஞர் மரு. பரமகுரு எழுதிய பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு என்னும் நூலிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.)

நன்றி தகவல்: விக்கிபீடியா